நகரி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் வன்முறை வெடித்துள்ளது. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களின் ராஜினாமா தொடர்கிறது.
ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலத்திற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று ஒப்புதல் அளி்த்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராயபாட்டி சாம்பசிவராவ் காங்கிரஸ் கட்சியில் இருந்தே ராஜினாமா செய்தார்.
மேலும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முன்னவடிவரம் சதீஷ்குமார், ஜம்மலமடுகு ஆதிநாராயணராவ், ராமசந்திராபுரம் தோட்டாநரசிம்மம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானாவுக்கு எதிரான 20வது அம்ச திட்ட கமிட்டி தலைவர் துளசிரெட்டியும் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. இந்துபுரம் அப்துல்கரமும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன் ஆந்திராவின் திருப்பதி, கர்னூல், நெல்லூர், விசாகப்பட்டினம், அனந்தபுரம், கடப்பா, சித்தூர் ஆகிய இடங்களில் தனி தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவபொம்மையை ஐக்கிய ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழுவினர் எரித்தனர்.
மேலும் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. மத்திய அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. விசாகப்பட்டினத்தில் பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.