டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இலவச மொபைல் போன் வழங்குவதற்கான புதுமையான திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி கிராமப்புறங்களில் கால்வாய், குளம், கண்மாய் போன்றவற்றை தூர்வாருவது, சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகளில் உள்ளூர்வாசிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆண்டுக்கு கட்டாயம் 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஏராளமானோர், குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த திட்டம்தான் மீண்டும் ஐ.மு.கூட்டணி அரசு ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது.
தற்போது இந்தியாவின் 67 சதவீத மக்களுக்கு விலை மலிவான உணவு தானியங்களை வழங்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
வரவிருக்கும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலை மனதில் கொண்டே மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை கொண்டுவந்ததாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி அதனை பொருட்படுத்தவில்லை.
இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இலவச மொபைல் போன் வழங்கும் கவர்ச்சிகரமான திட்டத்தை செயல்படுத்த ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொபைல் போன் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஆண்டு மொத்த வருவாயின் மீது 5 சதவீத வரி விதித்து, அதன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆகும் நிதியை திரட்டலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே இந்த திட்டத்தை தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற பெண்களின் வாக்குகளை அள்ளலாம் என்ற எண்ணத்துடன், இந்த திட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு கிராமம்/தாலுகா/மாவட்டம் வாரியாக தகுதியுடையோர்களது பட்டியலை அனுப்புமாறு மாநில அரசை கேட்டுக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மூன்றாண்டுகளுக்குள் தகுதியுடைய அனைவருக்கும் மொபைல் போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி முடிப்பது என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.