ஹைதராபாத்: தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உதயமாக்கப்பட்டுவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோரா ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 60 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலமாகிவிட்டது.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் 10 ஆண்டுகாலத்துக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது தெலுங்கானா அமைக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டுவிட்டதைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஆந்திராவுக்கான கூட்டு நடவடிக்கைக் குழு 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த இரு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் 'புதிய' ஆந்திராவின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இந்த முழு அடைப்பால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திரா செல்லும் பேருதுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பதி, சித்தூர் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.