மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் பச்சாமா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி ரஜினி பன்சால்(38). அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அவர் இருக்கும் வீடு கன மழை பெய்தால் தாங்காது. பஞ்சாயத்து தலைவியாகிய அவர் பிழைப்பு நடத்த உள்ளூரில் உள்ள பெண்கள் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்கிறார். மேலும் கிராமத்தில் பிச்சையும் எடுக்கிறார். அவருக்கு வர வேண்டிய சம்பளம் பல மாதங்களாக வரவில்லையாம்.
அவரது மூத்த மகன் அனில் எழுதப்படிக்கத் தெரியாத ரஜினிக்கு அவரது பெயரை எழுத கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செயலாளரால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் சில பேப்பர்களில் அவரது பெயரை எழுத வைத்துள்ளனர். அப்படி வாங்கிய கையெழுத்தை வைத்து பஞ்சாயத்து நிதியை சிலர் கையாடல் செய்துள்ளனர். ஆனால் எதற்காக பேப்பர்களில் பெயரை எழுதினோம் என்று தெரியாத ரஜினியின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அவரது மகன் அனில் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். ரஜினியை ஏமாற்றி கையெழுத்து வாங்கியது குறித்து விசாரணை நடத்த தாமோ கலெக்டர் ஸ்வதந்திர குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.