மத்திய பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கிறேன்.. நடிகை குஷ்புவின் பேட்டியால் சர்ச்சை!

காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்த போதும் பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிக்கிறேன் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை. இதனை பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுசிவில் சட்டம் மூலம் இந்துத்துவா செயல்திட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதைய மத்திய பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதையும் அக்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, பொதுசிவில் சட்டம் அவசியம்தான்.. பெண்களுக்கு சுதந்திரம் அவசியம். ஆனால் தேர்தல் அரசியலுக்காக இதை பாஜக கையிலெடுக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் முத்தலாக் முறை உள்ளிட்டவைகள் குரானில் இல்லை; மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆகையால் அதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறாரே என்ற கேள்விக்கு, காலத்துக்கேற்ப மாற்றங்கள் அவசியம்... இந்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்... ஆனால் உத்தரப்பிரதேச தேர்தலை வைத்து இதை பாஜக கையிலெடுக்கிறது எனக் கூறினார். பொதுசிவில் சட்டத்தை உறுதியாக ஆதரிப்பேன் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியிருக்கும் இக்கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தலித் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை கைது செய்க: திருமாவளவன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தலித் மாணவ, மாணவியர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மாணிக்கவல்லி என்பவர் உள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளியின் கழிவறைகளை சுத்தப்படுவத்துவதற்கு தலித் மாணவ, மாணவிகளை அவர் நிர்பந்தித்துள்ளார். இதன்பேரில் அப்பள்ளிக் கழிவறைகளை தலித் மாணவ, மாணவியர்கள் பல ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும், அந்த தலைமை ஆசிரியர் கழிவறைக்குச் செல்லும் போது, தலித் மாணவ, மாணவியரை தண்ணீர் வாளியை உடன் தூக்கிச்சென்று சுத்தம் செய்ய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நால்வழி புறச்சாலைகளை கடந்து மாணவர்களை தேநீர் வாங்கி வரவும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதாரமாக உள்ள புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறையின் மாவட்ட அலுவலர்களிடம் விசிகவினர் அளித்தனர். எனினும், அரசு தரப்பிலிருந்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசிக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அறிவுரை மட்டுமே வழங்கியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியளியை தந்துள்ளது. குறிப்பிட்ட அந்த தலைமையாசிரியரை காப்பாற்றும் நோக்கத்துடனேயே கல்வித்துறையும் செயல்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. ஆகவே, உடனடியாக அந்த தலைமையாசிரியரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்ய வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.